சிட்னியில் உள்ள வணிக வளாகத்திற்குள் தாக்குதல்

சிட்னியில் உள்ள வணிக வளாகத்திற்குள் கத்திக்குத்து தாக்குதல்: 6 பேர் பலி

by Bella Dalima 13-04-2024 | 6:09 PM

Sydney: அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலத்த காயங்களுடன் குழந்தை ஒன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றது. 

சிட்னி நகரின் Bondi Junction அருகே அமைந்துள்ள மிகப்பெரிய வணிக வளாகத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

40 வயதான நபர் ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதுடன், அந்நபர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 

தாக்குதலுக்கு உள்ளான நான்கு பெண்களும் ஒரு ஆணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்த மற்றுமொரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

9 மாத குழந்தை உட்பட 8 பேர் காயங்களுடன்  சிட்னியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

காயமடைந்த குழந்தையின் தாயும் உயிரிழந்தவர்களில் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழந்தைக்கு சந்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Bondi Junction-இல் உள்ள வணிக வளாகத்திற்குள் ( உள்ளூர் நேரப்படி சுமார் 15:10 மணியளவில்) நுழைந்த நபர், அங்கிருந்து சென்று விட்டு 10 நிமிடங்களின் பின்னர் திரும்பி வந்து தாக்குதலை நடத்தியுள்ளார். 

சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த சிரேஷ்ட பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரே தாக்குதல்தாரியை சுட்டுக்கொன்றுள்ளார்.