.webp)
Colombo (News 1st) உலகின் முன்னணி கோடீஸ்வரர் எலான் மஸ்க்(Elon Musk) அமெரிக்காவில் புதிய கட்சியை ஸ்தாபித்துள்ளார்.
தனது X தள பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மற்றும் குடியரசு எனும் இருகட்சி முறைக்கு சவால் விடுக்கும் வகையில் 'America Party' எனும் பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
மஸ்க்கின் புதிய கட்சி, அமெரிக்க தேர்தல் அதிகாரிகளால் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
அத்துடன் புதிய கட்சியை யார் வழிநடத்துவார்கள் அல்லது கட்சியின் அமைப்பு என்பன தொடர்பில் மஸ்க் மேலதிக தகவல்களை வழங்கவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான கருத்து வேறுபாட்டையடுத்து புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது X தளத்தில் "அமெரிக்காவிற்கு புதிய கட்சி அவசியமா?" எனும் தலைப்பில் அவர் கருத்துக்கணிப்பையும் நடத்தியிருந்தார்.
இதில் 2 க்கு 1 எனும் வீதத்தில் அமெரிக்கர்கள் புதிய கட்சியை விரும்புவதாக கருத்துக்கணிப்பின் பெறுபேறு வௌியிடப்பட்டிருந்தது.
2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் போது ட்ரம்ப்பின் தேர்தல் பிரசார நிதி வழங்குநர்களில் முக்கிய நபராக எலான் மஸ்க் செயற்பட்டதுடன் ட்ரம்ப் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்காக மஸ்க்கினால் 250 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்பட்டது.
தேர்தலுக்கு பின்னர் வரவு செலவுத்திட்டத்தில் பதிவாகும் திடீர் செலவுகளை அடையாளம் காணும் பணிக்காக ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்க செயற்றிறன் திணைக்களத்தின் தலைவராகவும் மஸ்க் நியமிக்கப்பட்டார்.
எலான் மஸ்க் கடந்த மே மாதம் நிர்வாகத்தை விட்டு வெளியேறி ட்ரம்ப்பின் வரி மற்றும் செலவுத்திட்டங்களைப் பகிரங்கமாக விமர்சித்த போது ட்ரம்ப்புடனான விரிசல் ஆரம்பித்தது.
இந்நிலையில், ட்ரம்ப் தனது "Big Beautiful" சட்டமூலத்தில் கைச்சாத்திட்ட பின்னர் நேற்று(05) முதல் அது சட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தினூடாக மஸ்க்கின் வர்த்தகத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படுமென விமர்சகர்கள் கூறுகின்றனர்.