ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார்

by Staff Writer 28-02-2024 | 7:41 AM

Colombo (News 1st) இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான சாந்தன் உயிரிழந்துள்ளார்.

திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த சாந்தன், உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று (28) அதிகாலை அவர் உயிரிழந்ததாக 'The Hindu' செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ராஜா என்ற இயற்பெயர் கொண்ட சாந்தன், 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

எனினும், இவர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். 

 கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஜனவரி மாதம் முதல் ராஜிவ் காந்தி அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

இலங்கை திரும்புவதற்கு அனுமதியளிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் சாந்தன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கு இந்திய மத்திய அரசாங்கம் அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய ஏழு குற்றவாளிகளும் கடந்த 38 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில் , பேரறிவாளன் முதலில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். 

இதனையடுத்து, சாந்தன் உள்ளிட்ட ஆறு பேரும் கடந்த நவம்பர் 11 ஆம் திகதி  இந்திய உச்ச நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் நளினி, ரவிச்சந்திரனை தவிர, முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார்,சாந்தன் ஆகியோர் திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.