யாழ். முற்றவௌி மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் அமைதியின்மை; ஐவர் கைது

by Bella Dalima 10-02-2024 | 7:10 PM

Colombo (News 1st) யாழ்ப்பாணம் - முற்றவௌி மைதானத்தில் நேற்று (09) நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் போது ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். 

சம்பவத்தின் போது காயமடைந்த மூன்று பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முற்றவௌி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இசை நிகழ்ச்சியில் தென்னிந்திய பிரபல பாடகர் ஹரிகரன், தென்னிந்திய பிரபலங்களான தமன்னா, ரம்பா, யோகி பாபு, கலா மாஸ்டர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வின் போது அமைதியின்மை ஏற்பட்டது. 

இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெளிவுபடுத்தினார்.

இந்திய பாடகர் ஹரிகரன் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியொன்றே யாழ்ப்பாணம் முற்றவௌி மைதானத்தில் நடைபெற்றது.  அதன்போது, ஒரு தரப்பினருக்கு ஆசனங்கள் ஒதுக்கப்பட்டு,  இசை நிகழ்ச்சியை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்றையவர்களுக்கு பின்புறத்தில் திறந்த வௌியில் இருந்து நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  அது இசை நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு தொலைவிலேயே இருந்தது. அவர்களுக்கு முன்நோக்கி செல்ல வேண்டிய தேவை இருந்துள்ளது. எனினும், டிக்கெட் வாங்கியவர்களுக்கே முன்பகுதியில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், அவர்கள் அந்த இடத்திற்கு செல்வதற்கு முயற்சித்துள்ளனர்.  எனினும், முன்னோக்கிச் செல்ல இடமளிக்கப்படவில்லை.  பின்னர் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாம் ஐவரை கைது செய்தோம்.  அவர்கள் பொலிஸ் பொறுப்பில் உள்ளனர்.  அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்போம்.  வௌிநாட்டவர்கள் என்பதனால், அவர்களின் பாதுகாப்பையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்

என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.