விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

நிர்ணய விலையில் நெல் கொள்வனவு செய்யாத வர்த்தகர்களை கறுப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை

by Bella Dalima 10-02-2024 | 3:53 PM

Colombo (News 1st) நிர்ணய விலையில் நெல் கொள்வனவு செய்யாத வர்த்தகர்களை கறுப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பெரும்போகத்தில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் சேகரிப்பாளர்கள் மற்றும் நெல் களஞ்சியசாலை உரிமையாளர்கள் நெல் கொள்வனவை ஆரம்பித்துள்ளனர்.

அதற்காக பல அரச மற்றும் வணிக வங்கிகள் மூலம் வர்த்தகர்களுக்கு மானிய வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகளை கவனத்தில் கொண்டு நிர்ணய விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வர்த்தகர்கள் கடன் வசதிகளையும் பெற்றுக்கொண்டு, விவசாயிகளிடம் இருந்து நிர்ணய  விலையில் நெல் கொள்வனவு செய்யாவிட்டால், அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். 

நெல் கொள்வனவு திட்டத்தில், சலுகை வட்டி வீதத்தை பெற்றுக்கொடுக்க 900 கோடி ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இம்முறை பெரும்போகத்தில் அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள போதிலும்  தனியார் பிரிவினர் நெல்லை கொள்வனவு செய்ய வேண்டிய குறைந்தபட்ச விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

நிதி அமைச்சின் முழுமையான மேற்பார்வையின் கீழ் நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

14% ஈரப்பதனுடைய நாட்டரிசி நெல் ஒரு கிலோகிராமிற்கான குறைந்தபட்ச விலை 105 ரூபாவாகும்.

ஒரு கிலோ சம்பா நெல் 120 ரூபாவிற்கும் ஒரு கிலோ கீரி சம்பா நெல் 130 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 14%-இற்கும் அதிகமான ஈரப்பதம் கொண்ட நாட்டரிசி நெல் ஒரு கிலோகிராமிற்கு குறைந்தபட்ச விலையாக 90 ரூபா நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

14%-இற்கும் அதிகமான ஈரப்பதம் கொண்ட சம்பா நெல் ஒரு கிலோகிராம் 100 ரூபாவிற்கும், கீரி சம்பா நெல் ஒரு கிலோகிராம் 120 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்பட வேண்டுமென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.