பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கப் போவது யார்?

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை: பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கப் போவது யார்?

by Bella Dalima 10-02-2024 | 6:16 PM

Pakistan: பாகிஸ்தானில் நடந்து முடிந்த பொதுத்தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சியமைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்கள் இருவருதே தேர்தல் வெற்றிக்கு உரிமை கோரியுள்ள நிலையில், நாட்டு மக்களை ஒற்றுமையாக செயற்படுமாறு பாகிஸ்தான் இராணுவம் வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் மொத்தமுள்ள 266 இடங்களுக்கு இதுவரை, 250 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் Pakistan Tehreek-e-Insaf (PTI) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளா்கள் 99 இடங்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளனர்.

இன்னும் சில மணி நேரங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவடையும் நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், பாகிஸ்தானில் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சோ்ந்து ஆட்சியமைக்க அந்நாட்டு முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவருமான நவாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) 71 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 53 இடங்களிலும், முட்டாஹிதா குவாமி இயக்கம் 17 இடங்களிலும், மற்ற இடங்களில் சிறிய கட்சியும் மற்றும் பிற சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். 

இதுவரை தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்படாத பெரும்பாலான தொகுதிகளிலும் PTI ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளா்களே முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தாலும், அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யாா் என்பதில் தொடா்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், வன்முறைகளை தவிர்க்குமாறும் நடுநிலையாக செயற்படுமாறும் பாகிஸ்தான் இராணுவம்  பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

தேர்தல் நடத்தப்பட்ட விதம் குறித்து மேற்கத்திய விமர்சனங்களையும் இராணுவ அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி பாகிஸ்தானில் பாராளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை  தேர்தல் நடைபெற்றதுடன், தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எந்தவொரு குழுவிற்கும் அல்லது கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனிடையே,  12 வழக்குகள் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 

எனினும், ஏனைய குற்றச்சாட்டுகளுக்காக அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் உள்ளார்.