இன்றும் பலத்த மழை

இன்றும் பலத்த மழை

by Chandrasekaram Chandravadani 10-01-2024 | 8:16 AM

Colombo (News 1st) மண்சரிவு காரணமாக பதுளை - கொழும்பு பிரதான வீதியின் ஹாலிஎல - உடுவர 7ஆம் கட்டை பகுதியில் போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது.

இதனிடையே, மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளமையினால் பொலன்னறுவை - மட்டக்களப்பு மார்க்கத்தின் மனம்பிட்டிய - கல்லேல்ல இடையிலான பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மக்களின் பயணங்களை இலகுபடுத்துவதற்காக விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

50-இற்கும் அதிகமான நீர்த்தேக்கங்கள் வான்பாய்வதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய நீர்த்தேக்கங்களும் வான்பாயும் மட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் சுதர்ஷனீ விதாணபதிரண குறிப்பிட்டார்.

சேனாநாயக்க சமுத்திரத்தின் 05 வான்கதவுகள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதுடன், இதனூடாக செக்கனுக்கு 5200 கனஅடி நீர் தாழ்நிலப் பகுதிகளுக்கு விடுவிக்கப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, தென் மாகாணங்களில் இன்று(10) மழையுடனான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.