பிரதிநிதியை நியமிக்கும் தீர்மானத்தில் இணக்கமில்லை

உள்ளூராட்சி மன்றங்களின் மேற்பார்வைக்கு விசேட பிரதிநிதியை நியமிக்கும் தீர்மானத்தில் உடன்பாடு இல்லை - தேர்தல்கள் ஆணைக்குழு

by Staff Writer 04-06-2023 | 1:49 PM

Colombo (News 1st) உள்ளூராட்சி மன்றங்களின் மேற்பார்வைக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் பிரதிநிதியை நியமிக்கும் தீர்மானத்தில் உடன்பாடு இல்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், அரசியல் கட்சியொன்றின் பிரதிநிதியாக இருப்பதால் அவரது பிரதிநிதியை நியமிப்பது உள்ளூராட்சி மன்றங்கள் அரசியல் மயமாகுவதற்கு வழிவகுக்கும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக ஏனைய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அநீதி இழைக்கப்படும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.

அதற்கமைய, உள்ளூராட்சி மன்றங்களின் மேற்பார்வைக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் பிரதிநிதியை நியமிக்கும் தீர்மானத்தில் உடன்பாடு இல்லை என்பதை உள்ளூராட்சி அமைச்சுக்கு எதிர்வரும் சில தினங்களில் எழுத்துமூலம் அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் இணைப்பு மற்றும் தேவையான தகவல்களை மாநகர ஆணையாளர் அல்லது அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் பிரதேச செயலாளரிடம் பெற்றுக்கொள்ள முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்காக வேறு ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டிய அவசியமில்லை என தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களுக்கு விசேட பிரதிநிதிகளை நியமிக்கும் தீர்மானத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது.