இரவு தபால் ரயிலை மீள சேவையில் ஈடுபடுத்த திட்டம்

திருகோணமலைக்கான இரவு தபால் ரயிலை இன்று (08) மீண்டும் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பு

by Bella Dalima 08-04-2023 | 3:06 PM

Colombo (News 1st) திருகோணமலைக்கான இரவு தபால் ரயிலை இன்று மீண்டும் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கல்ஓயாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலொன்று திருகோணமலை அக்போபுர - கித்துல்உதுவ பகுதியில் நேற்று பிற்பகல் தடம்புரண்டதில் 16 பேர் காயமடைந்தனர்.

இதன் காரணமாக கொழும்பு - திருகோணமலை வரையான ரயில் சேவை கல்ஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், கொழும்பு - திருகோணமலை மற்றும் திருகோணமலை- கொழும்பிற்கு இடையிலான இரவு தபால் ரயில்களை இன்று மீண்டும் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே பிரதி போக்குவரத்து அத்தியட்சகர் N.J. இந்திபொலகே தெரிவித்தார். 

திருகோணமலை அக்போபுர - கித்துல்உதுவ பகுதியில் ரயில் மார்க்கத்தை முழுமையாக சீர்செய்ய வேண்டியுள்ளதாகவும் இந்த பணிகளை இன்று மாலைக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

திருகோணமலை மார்க்கத்தில் தடம்புரண்ட ரயிலின் இரண்டு பெட்டிகள் மீள தடமேற்றப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி போக்குவரத்து அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார். 

தடம்புரண்டு கீழே வீழ்ந்த பெட்டி இன்னும் அகற்றப்படவில்லை.