கட்டாரில் இலங்கையர் பலி

கட்டாரில் 4 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இலங்கையர் பலி; ஒருவரை காணவில்லை

by Bella Dalima 24-03-2023 | 7:10 PM

Colombo (News 1st) கட்டாரில் கட்டடமொன்று இடிந்து வீழ்ந்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமற்போயுள்ளார்.

கட்டாரின் பின் டர்ஹமி அல் மன்சூரா பகுதியில் அமைந்துள்ள 4 மாடிக் கட்டடமொன்று கடந்த புதன்கிழமை இடிந்து வீழ்ந்தது.

இந்த அனர்த்தத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

56 வயதான நிஷங்க சில்வா என்பவ​ரே உயிரிழந்துள்ளதுடன், 60 வயதான அப்துல் ரசாக் ஜமீல் என்பவர் காணாமல் போயுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இவ்விருவரும் கட்டாருக்கு தொழிலுக்காக சென்று குறித்த கட்டடத்தில் தங்கியிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் தொடர்பில் ஆராய்வதற்காக கட்டாரிலுள்ள இலங்கை தூதரகத்தின் தொழிலாளர் பிரிவு அதிகாரிகள் கள விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய 12 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இவ்வருடம் 13,042 இலங்கையர்கள் கட்டாருக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளதுடன், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது அங்கு தொழில் புரிந்து வருவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.