.webp)
Colombo (News 1st) கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபையை நியமித்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பதவி நீக்கம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை விதித்திருந்த தற்காலிகத் தடையை நீக்குவதில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என ESPN Cricinfo இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் தொடர்ந்தும் அரசியல் தலையீடுகள் இடம்பெறாது என்பதற்கான உத்தரவாதத்தை வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம், இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக Cricinfo இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த கோரிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதுவரை உத்தரவாதம் வழங்கவில்லை எனவும், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை பதவியில் இருந்து நீக்கியதன் மூலம், அரசாங்கம் இனிமேலும் நாட்டின் கிரிக்கெட் நிர்வாகத்தில் தலையிடாது என்ற சமிக்ஞையை அரசாங்கம் வழங்குவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளை பதவி நீக்க முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரே மிகவும் முனைப்புடன் முயற்சித்ததாக Cricinfo இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.