மின்சார சபை அதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு

by Bella Dalima 27-01-2023 | 3:38 PM

Colombo (News 1st) ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டை மீறி மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டமையினால், இலங்கை மின்சார சபையின் தலைவர், மின்சக்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இணக்கப்பாட்டை மீறி நேற்று (26)  நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மின்சார சபை, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன நாட்டின் சட்டங்களை மதிக்காமல் தன்னிச்சையாக செயற்படுவதை அவதானிக்க முடிவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர் தர பரீட்சையின் போது மின் விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அண்மையில் இணக்கம் தெரிவித்திருந்தது.
     
இதனிடையே, பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதுடன், ஜனவரி 26 முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரையில் மின்வெட்டுக்கு ஆணைக்குழு அனுமதியளிக்காது எனவும் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய முன்வைக்கப்பட்ட தீர்வின் பிரகாரம், இந்த காலப்பகுதியில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, பரிந்துரைக்கமைய ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம் செயற்படாதவிடத்து, 1996 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் 21 ஆவது பிரிவின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதற்கு தமக்கு அதிகாரம் உள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.