மடுக்கரை மக்களின் வாழ்வில் ஔியேற்றிய மக்கள் சக்தி

by Staff Writer 11-06-2022 | 7:39 PM
Colombo (News 1st) நீண்ட காலமாக சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதில் இடரை எதிர்நோக்கிய மன்னார் - மடுக்கரை மக்களின் வாழ்வில் இன்று ஒளியேற்றி வைக்கப்பட்டது. மடுக்கரை மக்களுக்கான சுத்தமான குடிநீர் திட்டம் மக்கள் சக்தியால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மக்கள் சக்தி திட்டத்தின் மற்றுமொரு கட்டமாகவே இந்த திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மடுக்கரை கிராமத்தில் 350 க்கும் ​மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இந்த மக்களுக்கு சுத்தமான குடிநீர் என்பது இதுவரை காலமும் நிறைவேறா கனவாகவே அமைந்திருந்தது. மடுக்கரை கிராமத்தில் கிணறு ஒன்று உள்ள போதிலும் அதனூடாக சுத்தமான குடிநீரை இந்த மக்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. உவர் நீரைப் பயன்படுத்தி வந்தமையினால், இந்த கிராமத்தில் சிலர் சிறுநீரக நோய்க்கும் ஆளாகியுள்ளனர். இந்நிலையில், நாளாந்தம் 4 தொடக்கம் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றே மடுக்கரை மக்கள் குடிநீரை பெற்றுக்கொண்டனர். கடந்த 2020 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட கிராமங்கள் தோறும் மக்கள் சக்தி செயற்றிட்டத்தினால் மடுக்கரை கிராம மக்களின் இன்னல்கள் தொடர்பில் வெளிக்கொணரப்பட்டிருந்தது. அதற்கமைய, மடுக்கரை கிராம மக்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கான கைங்கரியம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்டான்லி டிமெல் உள்ளிட்ட அதிகாரிகளும் மக்கள் சக்தி அங்கத்தவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். கலை நிகழ்வுகளும் இதன்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மடுக்கரை மக்களுக்கான குடிநீர் திட்டத்தை செயற்படுத்துவதற்காக நன்கொடையாளர் ஒருவர் மக்கள் சக்தியுடன் கைகோர்த்துள்ளார்.