மூவருக்கு தடை விதிக்குமாறு பரிந்துரை

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு தடை விதிக்குமாறு பரிந்துரை

by Staff Writer 29-07-2021 | 6:55 PM
Colombo (News 1st) தனுஷ்க குணதிலக்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோருக்கு இரண்டு வருடங்களுக்கும் நிரோஷன் திக்வெல்லவிற்கு 18 மாதங்களுக்கும் கிரிக்கெட் தடை விதிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவினால் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் இங்கிலாந்திற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் Bio-bubble பாதுகாப்பு வலையத்தை மீறியிருந்தனர். இதனால் இலங்கை அணியின் குறித்த மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்காலிக போட்டித்தடை விதித்திருந்தது. சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி நிமல் திசாநாயக்க, சட்டத்தரணிகளான பண்டுக கீர்த்திநந்த, அசேல ருகவ, உசித்த விக்ரமசிங்க ஆகியோரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் M.R.W. சொய்சா ஆகியோரும் குறித்த சம்பவத்தை விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவில் அங்கம் வகிக்கின்றனர். குறித்த குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள தண்டனைகளுக்கு மேலதிகமாக 25,000 டொலர்களும் அபராதமாக விதிக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை நாளை (30) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக்குழுவுக்கு முன்வைக்கப்படவுள்ளதுடன், கிரிக்கெட் நிறுவனத்தின் அரசியலமைப்பிற்கு அமைய பரிந்துரையை அவ்வாறே நடைமுறைப்படுத்தும் அதிகாரம் நிறைவேற்றுக்குழுவுக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.