சிலிண்டர் வெடிப்பு: 10-க்கும் மேற்பட்ட சம்பவங்கள்

எரிவாயு கசிவு மற்றும் சிலிண்டர் வெடிப்பு தொடர்பில் 2 நாட்களில் 10-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு

by Staff Writer 30-11-2021 | 7:37 PM
Colombo (News 1st) சமையல் எரிவாயு கசிவு மற்றும் சிலிண்டர் வெடிப்பு தொடர்பில் நேற்றும் இன்றும் 10-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. காலி - இமதூவ, உடவன பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு 8 மணியளவில் எரிவாயு கசிவினால் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதேவேளை, மீரிகம - திலினகம பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு 8 மணியளவில் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது. மூடி வைத்திருந்த சிலிண்டரே வெடித்ததாக வீட்டிலுள்ளவர்கள் தெரிவித்தனர். இதேவேளை, அம்பலாங்கொடை நகரசபை உறுப்பினர் இந்திராணி ஐராங்கனியின் மொரட்டுவை - ராவனாவத்தையில் உள்ள வீட்டில் சமையல் எரிவாயு கசிவினால் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார். நவம்பர் மாதம் 04 ஆம் திகதி வெலிகம - கப்பரதொட சுற்றுலா விடுதியில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சமையல் எரிவாயு கசிவினால் நாளாந்தம் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துருகிரிய - ஒருவல்பிட்டி பகுதியில் வீடொன்றில் சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டதால் வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இன்று காலை 6.50 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் தீப்பற்றியதுடன், இதன்போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனிடையே, பிபிலை - லிதகும்புற பகுதியிலுள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றிலும் எரிவாயு கசிவினால் வெடிப்புச் சம்பவமொன்று நேற்றிரவு பதிவாகியுள்ளது. எம்பிலிப்பிட்டிய - கும்புகொட பகுதியிலும் வீடொன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது. இதேவேளை, ஹப்புத்தளை - தியத்தலாவ, தொடவத்தை பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் வீடொன்றில் சமையல் எரிவாயு கசிந்துள்ளது. இதன்போது, அடுப்பு தீப்பற்றியுள்ளதுடன், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். பண்டாரவளை - பிந்துனுவெவ, அளுத்கம பகுதியிலும் எரிவாயு கசிவு காரணமாக எரிவாயு தீ பரவியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையால் பாதிப்புக்குள்ளான மிலிந்த பிரேமதிலக்க என்பவர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நுகவர்வோர் பாதுகாப்பு அதிகார சபையில் இன்று முறைப்பாடு செய்துள்ளார். அண்மையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பலத்த காயமடைந்த இவரின் மனைவி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அண்மை நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினூடாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, சமையல் எரிவாயு வெடிப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு துறைசார் அமைச்சின் ஆலோசனை தெரிவுக்குழுவை நாளைய தினம் (01) பாராளுமன்றத்தில் கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். இதனிடையே, சமையல் எரிவாயு சிலிண்டர்களில் தீப்பற்றுதல், வெடித்தல் தொடர்பான விசாரணை மற்றும் தீர்வுகளை ஆராய்வதற்கு ஜனாதிபதியால் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பொல தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜித் டி அல்விஸ், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் W.D.W.ஜயதிலக்க, பேராசிரியர் பிரதீப் ஜயவீர, இலங்கையின் புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் நாராயன் சிறிமுது, விவசாய தொழில்நுட்ப நிறுவனத்தின் மேலதிக ஆணையாளர் நாயகம் கலாநிதி சுதர்சன சோமசிறி, இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் சிரேஷ்ட பிரதி பணிப்பாளர் சுஜீவ மஹகம ஆகியோர் இந்த குழுவின் ஏனைய அங்கத்தவர்களாவர். தேவையான அனைத்து தரப்பினரிடமிருந்தும் ஆலோசனைகளை பெற்று, தற்போது காணப்படும் நிலைமையை கண்காணித்து, பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இந்த குழுவிற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.