.webp)
-561303.jpg)
COLOMBO (News 1st) விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது பலாங்கொடை கஸ்ஸப தேரர் பொதுமக்களை ஆத்திரமூட்டும் மற்றும் தவறாக வழிநடத்தும் வகையிலான கருத்துகளை வெளியிட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் கட்சித் தலைமையகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினர் கடந்த சில நாட்களாக கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, பொதுமக்களை ஆத்திரமூட்டும், தவறாக வழிநடத்தும் மற்றும் மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையிலான பொய்யான கருத்துகளை பலாங்கொடை கஸ்ஸப தேரர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையக அமைப்பாளர் ஜகத் பஸ்நாயக்க முறைப்பாடு செய்துள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
விகாரமகாதேவி பூங்காவிற்கு 2 கத்திகளுடன் வந்த இருவர் தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் கடந்த 22ஆம் திகதி ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தானது முற்றிலும் பொய்யானதும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் பிழையானதுமான கருத்தாகும் என பொலிஸார் கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் சுட்டிக்காட்டினர்.
போலியான கருத்துகளை மக்கள் மயப்படுத்துவது பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 98ஆவது பிரிவை மீறும் செயலாகும் என்பதால் குறித்த கருத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான திருத்தப்படாத காணொளிகளை பொலிஸாரிடம் வழங்குமாறு ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறும் பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
விடயங்களை ஆராய்ந்த நீதவான், குறித்த கருத்துக்கள் தொடர்பான திருத்தப்படாத காணொளிகளை பொலிஸாருக்கு வழங்குமாறு ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டதுடன், விசாரணைகளின் முன்னேற்றத்தை துரிதமாக நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
