சரித்திர வெற்றியீட்டிய இலங்கை

430 ஓட்டங்கள் இலங்கை அடைந்து மாபெரும் வெற்றியீட்டிய இலங்கை

by Rajalingam Thrisanno 22-10-2026 | 10:42 PM

Colombo (News1st) பாகிஸ்தானில் நடைபெறும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய(22) போட்டியில் இலங்கை அணி மகத்தான வெற்றியை ஈட்டி சரித்திரம் படைத்துள்ளது.

போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 430 ஓட்டங்கள் இமாலய இலக்கை இலங்கை அணி 49.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு கடந்து மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தியது.

அண்மைக் காலமாக தோல்விகளால் துவண்டுபோயிருந்த இலங்கை அணிக்கும் இரசிகர்களுக்கும் புத்துணர்ச்சி அளித்த போட்டியாகவும் வெற்றியாகவும் இது அமைந்தது.

சமீப காலத்தில் இலங்கை விளையாடிய போட்டிகளில் இரசிகர்களை ஆசனத்தின் நுனிக்கே அமரச் செய்து மிகுந்த எதிர்பார்ப்பையும் அதேவேளை இறுதிவரை விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாமல் பரபரப்பை ஏற்படுத்திய போட்டியாகவும் அமைந்ததென்றால் அது மிகையாகாது.

ராவல்பிண்டியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 429 ஓட்டங்களைக் குவித்தது.

அணித்தலைவர் ஹெரி புரூக் 116 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 21 பௌண்டரிகளுடன் 202 ஓட்டங்களை விளாசினார்.

இது சர்வதேச ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஒருவர் இரட்டை சதமடித்த முதல் சந்தர்ப்பமாகும். 

இறுதிவரை ஆட்டமிழக்காத வில் ஜெக்ஸ் 66(30) ஓட்டங்களையும் ஜோ ரூட் 69(66) ஓட்டங்களையும் டொம் பென்டன் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதன்போது ஹெரி புரூக் - வில் ஜெக்ஸ் ஜோடி 79 பந்துகளில் 185 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

மாபெரும் இலக்கான 430 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி 4.2 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு முதலிரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதனால் வழமை போன்று இலங்கை தோல்விடைந்துவிடும் என்ற எண்ணம் இரசிகர்களுக்கு ஏற்பட்டாலும் அதனை பொய்யாக்கும் வகையில் அவிஷ்க பெர்னாண்டோவும் பவன் ரத்நாயக்கவும் அபாரமாக விளையாடினர். 

இவர்கள் 3ஆம் விக்கெட்டுக்காக 166 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

83 பந்துகளை எதிர்கொண்ட அவிஷ்க பெர்னாண்டோ 2 சிக்ஸர்கள், 11 பெண்டரிகளுடன் 97 ஓட்டங்களைப் பெற்றார். 

தொடர்ந்து அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய பவன் ரத்நாயக்க 106 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 15 பௌண்டரிகளுடன் 130 ஓட்டங்களை குவித்தார். 

அதிரடி காட்டிய தசுன் ஷானக 50 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 6 பௌண்டரிகளுடன் 97 ஓட்டங்களை விளாசினார். 

இலங்கை அணி ஒரு கட்டத்தில் 47 ஓவர்களில் 406 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

பின்வரிசை வீரர்களான ஷஹன் ஆரச்சிகே, துனித் வெல்லாலகே, ஹேஷான் மலிங்க ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி 49.3 ஓவர்களில் 423 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து கடும் நெருடிக்கடிக்குள்ளானது.

எனினும், களத்தில் தனி ஒருவராக நின்று நம்பிக்கையுடன் போராடிய ஜனித் லியனகே இறுதி ஓவரின் 5 ஆவது பந்தில் சிக்ஸரை விளாசி இலங்கைக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

27 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்ஸர்கள், 7 பௌண்டரிகளுடன் 61 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

இது சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் இலங்கை அணி அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை பதிலளித்தாடிக் கடந்த முதல் வெற்றியாகவும் பதிவானது.