.webp)
-559122.jpg)
Colombo (News 1st) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரா இன்று (18) ஆரம்பமாகின்றது.
பெரஹராவின் ஆரம்ப நிகழ்வாக இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை கும்பல் பெரஹரா இடம்பெறவுள்ளது.
பெரஹராவை முன்னிட்டு கண்டி நகரை மையமாக கொண்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்தார்.
எசல பெரஹராவின் போது, கண்டி நகருக்கு பிரவேசிக்கும் 14 நுழைவிடங்களை உள்ளடக்கி வீதித்தடைகள் அமைக்கப்படவுள்ளன.
13 வாகன நிறுத்துமிடங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், பெரஹரா காலத்தில் கண்டி நகரை தவிர்த்து பயணிக்கும் வகையில் பல மாற்று வழிகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பொதுமக்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக்கொடுப்பதற்காக பொலிஸாரால் விசேட தகவல் முகாமைத்துவ கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று ஆரம்பமாகும் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரா, எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதற்காக இலங்கை பொலிஸாரால் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வீதித் தடைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதித்தல், சுற்றுலா பயணிகளுக்கான வழிகாட்டல்கள் மற்றும் வாகனத் தரிப்பிட வசதிகளை வழங்கல் என்பன இந்த வேலைத்திட்டத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள, www.police.lk எனும் இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து கண்டி எசல பெரஹரா என்பதை தெரிவு செய்ய வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரஹராவிற்காக kandyesalaperahera.police.lk எனும் இணையத்தள முகவரி உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹராவை காணவரும் பக்தர்கள், இந்த இணையத்தளத்தை பயன்படுத்துமாறும் இலங்கை பொலிஸாரால் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
