.webp)
-558555.jpg)
Colombo (News 1st) வருடத்தின் முதல் 6 மாதங்களில் நாடு முழுவதும் மருந்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக 22,69,500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
காலாவதியான மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், சிரிஞ்ஜ், கிறீம் வகைகள், குழந்தைகளுக்கான உற்பத்திகள் மற்றும் கர்ப்பப்பரிசோதனை கருவிகள் ஆகியவற்றை விற்பனைக்காக வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றிவளைப்புகளின் போது 362 மருந்தகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
கடந்த 03 மற்றும் 04 ஆம் திகதி ஆகிய 2 தினங்களில் மாத்திரம் நாடு முழுவதும் 109 மருந்தகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது விசாரணை அதிகாரிகளினால் 86 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
மருந்து அல்லது சுகாதாரம் சார்ந்த உற்பத்திகளை கொள்வனவு செய்யும் போது அதன் காலாவதி திகதி மற்றும் லேபலில் இருக்கும் தகவல்களை நன்கு சரிபார்த்து கொள்வனவு செய்யும்படி நுகர்வோர் அதிகார சபை பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
ஏதேனும் சட்ட மீறல்கள் தொடர்பான தகவல்கள் இருந்தால் 1977 என்ற துரித அழைப்பு இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவிக்க முடியும்.
