ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுதலை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு

by Staff Writer 22-07-2026 | 4:41 PM

Colombo (News 1st) முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டார். 

2008 முதல் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 'நேவி சம்பத்' என அழைக்கப்படும் முன்னாள் கடற்படை லெப்டினன்ட் கொமாண்டர் ச்சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி தலைமறைவாக இருக்க ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உள்ளிட்ட 3 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு நேற்று(22) கொழும்பு - கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன 2024ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதி அப்போதைய சட்ட மாஅதிபராகப் கடமையாற்றிய சஞ்சய் ராஜரத்னத்தின் அறிவுறுத்தலின் பேரில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். 

பின்னர் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கையை ஆராய்ந்த புலனாய்வு அதிகாரிகள், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கடந்த ஜூன் 10 ஆம் திகதி மீண்டும் இந்த வழக்கின் சந்தேகநபராகப் பெயரிட்டனர். 

அதற்கமைய, சந்தேகநபரை நேற்று(22) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்ததுடன் சந்தேகநபரான முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நீதிமன்றத்தில் ஆஜரானார். விடயங்களை ஆராய்ந்த கோட்டை நீதவான் சந்தேகநபரை பிணையில் விடுவிக்க அனமதி வழங்கினார். 

சம்பவம் தொடர்பில் தற்போது பிணையிலுள்ள சந்தேகநபர்களான முன்னாள் கடற்படை லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி மற்றும் லக்சிறி அமரசிங்க ஆகியோரும் நீதிமன்றில் ஆஜராகினர். 

சந்தேகநபர்கள் முன்னிலையில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை வாசித்துக்காட்டப்பட்டதுடன் தாம் குற்றமற்றவர்கள் என சந்தேகநபர்கள் இதன்போது தெரிவித்தனர். 

இதனை ஆராய்ந்த கோட்டை நீதவான், வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதியிட்டு அறிவித்தார்.