எயார்பஸ் கொடுக்கல் - வாங்கல் விசாரணை

எயார்பஸ் கொடுக்கல் - வாங்கல் விசாரணைக்காக CID அதிகாரிகள் அவுஸ்திரேலியாவிற்கு பயணம்

by Staff Writer 21-07-2026 | 3:12 PM

Colombo (News 1st) குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு 10 விமானங்களை கொள்வனவு செய்யும் போது, ஐரோப்பிய விமான நிறுவனமொன்றிடமிருந்து 20 இலட்சம் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெறப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக அதிகாரிகள் குழுவினர் அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2014 ஆம் ஆண்டில் 06 எயார்பஸ் விமானங்களையும் 2017ஆம் ஆண்டில் 07 எயார்பஸ் விமானங்களையும் கொள்வனவு செய்யும் போது, ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அடிப்படையிலான கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இந்த ஒப்பந்தங்களுக்கு அமைய, A-330 ரக விமானொன்றுக்கு 01 மில்லியன் டொலரும் A-350 ரக விமானொன்றுக்கு 1.5 மில்லியன் டொலரையும் வழங்குவதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரிகளுடன் ஐரோப்பிய விமான நிறுவனமொன்று உடன்பாட்டை எட்டியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் குத்தகை அடிப்படையில் விமானங்களை பெற்றுக்கொள்ளும் போது, விமானமொன்றுக்கு 04 இலட்சம் டொலர்களை வழங்குவதற்கும் உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.

அதற்மைய, உடன்பாடு எட்டப்பட்டிருந்த தொகையில் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் வெளிநாட்டு வங்கிக்கொன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு வௌிக்கொணர்ந்திருந்தது.

குறித்த தொகையில் 60 மில்லியன் ரூபாவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு 2015 காலப்பகுதியில் மூன்று சந்தர்ப்பங்களில் வழங்கியதாக கபில சந்திரசேன வாக்குமூலம் வழங்கியதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கடந்த மார்ச் 19 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினரான ஷமீந்திர ராஜபக்ஸவிற்கு வங்கிக் கணக்குகளின் ஊடாக 3,25,000 டொலர்கள் வழங்கப்பட்டதாகவும் கபில சந்திரசேன வாக்குமூலம் வழங்கியதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு விடயங்களை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நயோமாலி விஜேநாயக்க, முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஸ, அவரது மகன் ஷமீந்திர ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தினால் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஏனைய செய்திகள்