கல்வித்துறைக்கு 382 பில்லியன் முதலீடு - ஜனாதிபதி

கல்வி மறுசீரமைப்புடன் தொழிற்கல்வியை வலுப்படுத்த திட்டம் : 2027 வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு

by Staff Writer 18-07-2026 | 8:35 AM

Colombo (News 1st) புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு இணையாக நாட்டின் தொழிற்கல்வித் துறையை வலுப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவற்றுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்ய தயாராகவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 2026 முதல் விசேட தேவையுடைய மாணவர்களுக்காக மாதாந்தம் வழங்கப்படும் உதவித்தொகையை அதிகரிப்பது குறித்தும் தேசிய கல்வியியல் கல்லூரிகளின் ஆசிரியர் மாணவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதன் அவசியம் குறித்தும் இங்கு விரிவாகக் ஆராயப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள மாணவர் காப்புறுதி திட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள், ஜனாதிபதிக்கு விளக்கமளித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

2027 - 2031 வரையான காலப்பகுதிக்குள் கல்வித்துறையின் முன்னேற்றத்திற்காக 382 பில்லியன் ரூபா பெருந்தொகையான முதலீட்டை மேற்கொள்வதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், இதனூடாக  முன்மொழியப்பட்டுள்ள டிஜிட்டல் பரிமாற்றத் திட்டம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

கல்வித்துறையில் நிலவும் ஆசிரியர் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் சம்பள முரண்பாடுகள் குறித்து அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து எதிர்காலத்தில் கலந்துரையாடுவதற்கும் அதற்காக விசேட ஆணைக்குழுவின் ஊடாக நிரந்தர தீர்வுகளை வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்