இலங்கை - அவுஸ்திரேலியா இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் சிரச ஊடக வலையமைப்பு - ABC அவுஸ்திரேலியா இடையே ஒப்பந்தம்

by Staff Writer 28-05-2026 | 6:04 AM

Colombo (News 1st) இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான தொடர்புகளை மேலும் விரிவாக்குதல் மற்றும் வலுப்படுத்தும் வகையில் சிரச ஊடக வலையமைப்பு மற்றும் அவுஸ்திரேலியாவின் தேசிய ஊடக வலையமைப்பான Australian Broadcasting Corporation எனும் ABC அவுஸ்திரேலியா இடையே உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை, முதலீடு மற்றும் வர்த்தகம், கலை ஆக்கம் போன்ற மனித தொடர்புகளை மேம்படுத்தும் இவ்வாறான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

சிரச ஊடக வலையமைப்பு சார்பில் மகாராஜா ஊடக வலையமைப்பின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல் மற்றும் ABC அவுஸ்திரேலியா சார்பில் அதன் சர்வதேச விவகாரங்கள் பிரிவின் பிரதானி Claire M.Gorman ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.

கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் பணிப்பாளர் சுரங்க ஜயலத் மற்றும் ABC அவுஸ்திரேலியா சர்வதேச ஔிபரப்பு மற்றும் டிஜிட்டல் சேவை பிரிவின் பிரதானி நெஸ்ரின் பூசியான் போன்றோரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

இந்த புரிந்துணர்வு  உடன்படிக்கை ஊடாக ABC அவுஸ்திரேலியா மற்றும் சிரச ஊடக வலையமைப்பிற்கு இடையில், நிகழ்ச்சி பரிமாற்றங்கள், ஒன்றிணைந்த தயாரிப்பு மற்றும் தொழில்முறை ரீதியிலான பரிமாற்ற நிகழ்ச்சிகளை ஔிபரப்புவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.

சிரச ஊடக வலையமைப்பு மற்றும் ABC அவுஸ்திரேலியாவிற்கு இடையில் 2022ஆம் ஆண்டு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட அடிப்படை உடன்படிக்கைக்கு அமைவாக, 2023 ஏப்ரல் 19ஆம் திகதி முதல் ABC-யின் நிகழ்ச்சிகள் சிரச ஊடக வலையமைப்பில் ஔிபரப்பாக ஆரம்பித்தன.

புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக இருதரப்பு உறவு மேலும் வலுப்படுவதுடன், அதன் முதற்படியாக Culture by Design Season 2 நிகழ்ச்சி சிரச ஊடக வலையமைப்பு மற்றும் ABC அவுஸ்திரேலியாவின் இணை தயாரிப்பாக வௌியாகவுள்ளமை விசேட அம்சமாகும்.

கலாசாரத்துடன் தொடர்புடைய கட்டடக் கலையை அடிப்படையாகக் கொண்ட இந்த நிகழ்ச்சி எதிர்காலத்தில் சர்வதேச ரீதியில் ஔிபரப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வாழ்த்து தெரிவித்த இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் Matthew Duckworth, இந்த உடன்படிக்கையானது இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துமென கூறியுள்ளார்.