.webp)

Colombo (News 1st) ஹட்டன் - டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் வயோதிபத் தம்பதியினரின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் எதிர்வரும் ஜூன் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஹட்டன் நீதவான் முன்னிலையில் இன்று(24) ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டிக்கோயா பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபரும் அவரது மனைவியும் பொகவந்தலாவை பெற்றோசோ பகுதி வீடொன்றில் மறைந்திருந்த போது பொதுமக்களின் உதவியுடன் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கு முன்னர், சந்தேகநபரை இன்று டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி பொலிஸார் மருத்துவ அறிக்கை பெற்றுக்கொண்டனர்.
சந்தேகநபர் பசறை பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் பொகவந்தலாவை பெற்றோசா பகுதியில் தங்கியிருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தோடு தொடர்புடைய கொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துச்சென்றுள்ளமை விசாரணைகளின் பின்னர் உறுதியாகியதையடுத்து வர்த்தக நிலையத்தின் அருகில் உள்ள பாதுகாப்பு கமராக்களின் உதவியுடன் பொலிஸார் சந்தேகநபரை அடையாளம் கண்டனர்.
அதனையடுத்து, சந்தேகநபரை பற்றிய தகவல்களை பெற்றுத்தருமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியதையடுத்து பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து தங்க நகைகள், கத்தி மற்றும் இரும்பு ஆயுதம் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட தம்பதியினரின் இறுதிக் கிரியைகள் டிக்கோயாவிலுள்ள பொது மயானத்தில் நடைபெற்றது.
