.webp)

Colombo (News 1st) பலத்த மழையுடனான வானிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,736 ஆக அதிகரித்துள்ளது.
கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களில் 4662 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
11 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 297 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
360 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படுகின்றன.
இதேவேளை, மழையுடனான வானிலையால் களு கங்கை, மில்லகந்த பகுதியில் சிறிய அளவிலான வெள்ள மட்டம் வரை உயர்வடைந்துள்ளது.
களு கங்கையின் நீர்மட்டம் எல்லகாவ, புடுபாவுல மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் எச்சரிக்கை மட்டத்தை அண்மித்துள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இங்கிரிய - நம்பபான பகுதியிலுள்ள சில வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக களுத்துறை மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
களு கங்கையின் நீரேந்துப் பகுதிகளில் நிலவும் சிறியளவிலான வெள்ள எச்சரிக்கை இன்று நண்பகல் முதல் மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, ஹொரண, தொடங்கொட, மில்லனிய, களுத்துறை, புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள களு கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் இந்தப் பகுதிகளினூடாக பயணிக்கும் வாகன சாரதிகள் தற்போதைய நிலைமை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
அத்தனகலு ஓயாவின் தூனமலே பகுதியில் தொடர்ந்து சிறியளவிலான வெள்ள மட்டம் நிலவுகின்றது.
எவ்வாறாயினும், வெள்ளநீர் படிப்படியாக குறைந்து வருவதாக கம்பஹா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 11,500 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் அஜித் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமை காரணமாக ஜா-எல மற்றும் கட்டான பகுதிகளில் வெள்ள நிலைமை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நிலவும் மழையுடனான வானிலையினால் 8 பிரதான நீர்த்தேக்கங்களும், 8 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கடும் மழையுடனான வானிலை காரணமாக அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு 2 மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, ருவான்வெல்ல ஆகிய பகுதிகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, குருவிட்ட மற்றும் எஹலியகொட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் உடனடியாக வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, களுத்துறை, கேகாலை, கம்பஹா, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
