சமாதான பாதயாத்திரைக்காக மகா சங்கத்தினர் வருகை

சர்வதேச சமாதான பாதயாத்திரைக்காக மகா சங்கத்தினர் நாட்டிற்கு வருகை

by Staff Writer 21-04-2026 | 3:04 PM

Colombo (News 1st) வன்முறையற்ற செய்தியை உலகிற்கு பறைசாற்றிய சர்வதேச சமாதான பாதயாத்திரையை முன்னிட்டு வியட்நாமின் பஞ்ஞாகர ​தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் "ஆலோகாவுடன்" இன்று(21) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

சமாதான பாதயாத்திரைக்கு தலைமை தாங்கும் பஞ்ஞாகர தேரருடன் ஆலோகா உள்ளிட்ட குழுவினர், இலங்கைக்கு வருகை தருவதற்காக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து நேற்று முற்பகல் புறப்பட்டனர்.

சமாதான பாதயாத்திரையில் பங்கேற்கின்ற 12 தேரர்கள் அடங்கிய குழாத்தில் அங்கம் வகிக்கின்ற தாய்லாந்திலுள்ள ரதனதேரர் உள்ளிட்ட சில தேரர்கள் கடந்த வௌ்ளிக்கிழமை அதிகாலை நாட்டிற்கு வருகை தந்திருந்தனர்.

இந்த சமாதான பாதயாத்திரைக்கான ஒருங்கிணைப்பை சிரச ஊடக வலையமைப்பு மேற்கொள்கின்றது.

நாளை(22) காலை மகா சங்கத்தினருக்கான தானம் வழங்கப்பட்ட பின்னர், தம்புள்ளையிலிருந்து சமாதான பாதயாத்திரை ஆரம்பமாகும்.

மாத்தளை அலுவிஹாரை, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை, கேகாலையிலுள்ள பெலிகம்மன ரஜமகா விகாரை, தோலங்கமுவ மத்திய கல்லூரி, யக்கல சந்திரஜோதி விகாரை ஆகிய இடங்களின் ஊடாக களனி ரஜமகா விகாரையை சமாதான பாதயாத்திரை சென்றடையவுள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதி களனி ரஜமகா விகாரையிலிருந்து புறப்படும் சமாதான பாதயாத்திரை, மாலை 4 மணிக்கு சுதந்திர சதுக்கத்தை வந்தடைந்த பின்னர் ஸ்ரீ மகா போதியின் கிளையொன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் அமெரிக்காவிலிருந்து வருகை தந்துள்ள மகா சங்கத்தினரிடம் கையளிக்கப்படவுள்ளது.

சிரச ஊடக வலையமைப்பின் வளாகத்தை கடந்து கங்காராம விகாரையில் சமாதான பாதயாத்திரை இனிதே நிறைவடையவுள்ளது.

ஏனைய செய்திகள்