.webp)

Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 07 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி இதே போன்றதொரு நாளில் நாட்டின் முக்கிய தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட சில இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 269 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன், 500-இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தாக்குதலில் உயிரிழந்த, காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக நாட்டின் பல்வேறு தேவாலயங்களில் விசேட ஆராதனை நிகழ்வுகள் இன்று(21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பிரதான ஆராதனை நிகழ்வு, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நடைபெற்றது.
தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இன்று காலை 8.45 முதல் 8.47 வரை இரண்டு நிமிட மென அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது ஸ்ரீ லங்கா ராமஞ்ஞ பீடத்தின் தென்னிலங்கைக்கான பிரதம சங்கநாயக்கர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர், வத்திக்கானின் அப்போஸ்தலிக்க பிரதிநிதி கலாநிதி ஆண்ட்ரே ஜோஸ்வோவிச் உள்ளிட்ட சர்வமத தலைவர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரூ ப்ரான்ச் ஆகியோர் இணைந்திருந்தனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் சாதகமான நிலையில் உள்ளதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இதன்போது தெரிவித்தார்.
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த, காயமடைந்த உறவுகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக நாட்டின் பல இடங்களில் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
குருணாகல் புனித அன்னம்மாள் தேவாலயத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தலில் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
மாத்தறை கன்னி மரியாள் தேவாலயத்தில் மற்றுமொரு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மட்டக்களப்பு - சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்த 31 பேரும் ட்டக்களப்பு காந்தி பூங்காவிலுள்ள நினைவுத்தூபிக்கு அருகில் நினைவுகூரப்பட்டனர்.
