.webp)

Colombo (News 1st) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை உடனடியாக பணிக்கு திரும்புமாறு வலியுறுத்தி 04 மின்சார நிறுவனங்களின் தலைவர்கள் ஊழியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க இலங்கை மின்சாரத் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மின்சார சபையின் அனைத்து சேவைகளும் கடந்த 09ஆம் திகதி முதல் 04 துணை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அந்த துணை நிறுவனங்களுக்கும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்தியாவசிய சேவையாக மின்சாரம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள 04 நிறுவனங்களின் தலைவர்களும் இத்தகைய சூழ்நிலைகளில் தமது கடமைகளை புறக்கணிக்கும் ஊழியர்கள் அத்தியாவசிய விதிமுறைகளின் கீழ் கடுமையான குற்றமிழைத்தவர்கள் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
மின்சார சேவைக்குள் தமக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளில் ஈடுபடுமாறு 04 மின்சார நிறுவனங்களின் தலைவர்களும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
ஊழியர்களின் 64-இல் 62 கோரிக்கைகளுக்கு தீர்வை எட்டுவதற்கு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மின்சார தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் 04 மின்சார நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையே நேற்று(10) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இணக்கம் காணப்பட்டது.
எஞ்சிய கோரிக்கைகள் குறித்து கலந்துரையாட ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் நடத்தவும் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இந்த விடயங்களை உள்ளடக்கி 04 மின்சார நிறுவனங்களின் தலைவர்களின் கையொப்பங்களுடன் கூடிய கடிதங்கள், ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டது.
எனினும், மின்சார சபை பொறியியலாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கத்தினர் தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கடிதத்தின் சட்டபூர்வ தன்மை செல்லுபடியாகும் நிலை தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப்போவதில்லையென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
