ஈஸ்டர் தாக்குதல் : உயர் நீதிமன்ற தீர்ப்பு

அளுத்கம இளைஞரின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

by Staff Writer 04-03-2026 | 9:38 PM

Colombo (News 1st) 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் ISIS பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புபட்டுள்ளதாக தெரிவித்து அளுத்கம பகுதியைச் சேர்ந்த மொஹமட் மில்ஹான் எனற இளைஞரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தமையினூடாக அவரின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று(04) தீர்ப்பளித்துள்ளது.

குறித்த கைது நடவடிக்கைக்கு பொறுப்பான கல்கிசை பொலிஸ் நிலையத்தின் பிரதி பொலிஸ் இன்ஸ்பெக்டர் தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 30,000 ரூபா இழப்பீட்டையும் அரசாங்கம் 20,000 ரூபா இழப்பீட்டையும் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனுதாரரின் அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதன் பின்னர் உயர் நீதிமன்ற நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

ஏனைய நீதியரசர்களின் இணக்கத்துடன் தீர்ப்பை அறிவித்த நீதியரசர் சோபித ராஜகருணா 2019 மே 05ஆம் திகதி அத்திடிய பகுதியில் மனுதாரர் கைது செய்யப்பட்டு பின்னர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்யும் போது அதற்கான காரணங்களை சந்தேகநபருக்கு பொலிஸார் கட்டாயமாக அறிவிக்க வேண்டும் என மனுதாரர் சுட்டிக்காட்டினார்.

எனினும் தன்னை கைது செய்த சந்தர்ப்பத்தில் அதற்கான காரணங்களை பொலிஸார் அறிவிக்கவில்லை என மனுதாரர் தெரிவித்தார்.

ISIS அமைப்பின் சிந்தனைகளை கடைப்பிடிப்போரின் பட்டியலில் மனுதாரரின் பெயர் 84ஆவது இடத்தில் இருந்ததாக பிரதிவாதிகளான பொலிஸார் மன்றுக்கு அறிவித்தனர்.

இருதரப்பினரின் வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள் குழாம் மனுதாரரை கைது செய்த சந்தர்ப்பத்தில் போதுமான ஆதாரங்கள் இருப்பதை பிரதிவாதிகள் மன்றுக்கு உறுதிப்படுத்த தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியது.

அதற்கமைய இந்த கைது நடவடிக்கையால் மனுதாரரின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.