.webp)
Colombo (News 1st) யாழ்ப்பாணத்தை இலங்கையின் 'இறுதி எல்லை' என வர்ணித்து Condé Nast Traveller India விசேட நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் வரலாறு, தனித்துவமான கலாசாரம், மக்களின் மீளெழுச்சி, இயற்கை எழில் கொஞ்சும் அழகு உள்ளிட்ட விடயங்கள் குறித்த நாளிதழில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம் இலங்கையின் வடக்கு தீபகற்பமான யாழ்ப்பாணம், சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய மையமாக மாறியுள்ளது.
நீண்ட கால போர் வடுக்களை சுமந்திருந்த யாழ்ப்பாணத்தின் வளர்ச்சியை எழுத்தாளர் கல்பனா சுந்தர், தனது நாளிதழில் மிக அழகாகப் பதிவு செய்துள்ளார்.
பல்லாண்டு கால யுத்த தனிமைப்படுத்தலுக்கு பின்னர் இலங்கையின் வடமுனையிலுள்ள யாழ்ப்பாணம் ஒரு தனி உலகமாக காட்சியளிப்பதாக எழுத்தாளர் கல்பனா சுந்தர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2009ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த நிலப்பரப்பு அடைந்துள்ள மாற்றமும் அதன் தனித்துவமான அடையாளமும் சர்வதேசப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
13ஆம் நூற்றாண்டு தமிழ் இராச்சியத்தின் தலைநகராகவும் தமிழ் இலக்கியம் மற்றும் கலாசாரத்தின் கேந்திர மையமாகவும் விளங்கிய யாழ்ப்பாணத்தின் ஆழமான வேர்கள் இந்த நாளிதழில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
3 தசாப்த கால போர் வடுக்களையும் 2004 சுனாமி பேரழிவையும் கடந்து யாழ்ப்பாணம் தனது தனித்துவமான கலாசார அடையாளத்தை உலக அரங்கில் இன்று மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தின் தனித்துவ உணவு பாரம்பரியங்களான சத்து நிறைந்த சிவப்பு அரிசி, பனை சார் உணவுகள், நறுமணம் மிக்க வாசனைத் திரவியங்கள் சர்வதேசப் பயணிகளை ஈர்த்துள்ளதாக குறித்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Condé Nast Traveller India நாளிதழ் யாழ்ப்பாணத்தை வெறும் ஒரு சுற்றுலாத் தலமாக மாத்திரமன்றி, மீண்டெழுந்த ஒரு தேசமாக உலகிற்கு பறைசாற்றியுள்ளது.
யாழ்ப்பாணத்தின் நெடிய வரலாறு, மக்களின் அசைக்க முடியாத மீள்திறன், ஆழமான நம்பிக்கை மாற்றமற்ற கலாசாரம் ஆகியவற்றை ஒன்றிணைத்து யாழ்ப்பாணத்தை ஒரு உன்னதமான இடமாக இந்த நாளிதழ் சித்தரித்துள்ளது.
