.webp)

Colombo (News 1st) திருகோணமலையில் கரையோர பாதுகாப்பு சட்டத்தை மீறியமை மற்றும் அத்துமீறிய கட்டுமானம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரையும் பிணையில் விடுவிக்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று(11) உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
திருகோணமலை கடற்கரையில் கட்டப்பட்ட ஹோட்டலொன்றை கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது கொழும்பு பகுதியை சேர்ந்த குழுவினர் தலையிட்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினர் அந்த இடத்திற்கு புத்தர் சிலையை கொண்டு வந்ததுடன் பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திற்கு சென்றபோது அமைதியின்மை ஏற்பட்டது.
மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் குறித்த காணி ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி போதிராஜ விகாரைக்கு வழங்கப்பட்டதாக எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களையும் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்து முன்னின்று நடத்தியிருந்தார்.
திருகோணமலை ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், திருகோணமலை சுகித்தவங்ச திஸ்ஸ தேரர், திருகோணமலை நந்த தேரர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.
இதனை தவிர குறித்த காணியில் உணவகத்தை குத்தகை அடிப்படையில் நடத்துவதற்கு தலையிட்டதாகக் கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் தீபானி லியனகே, விதுரங்க லொகுகலப்பத்தி, எல்.ரீ.பெரேரா, பியல் பிரேமசிறி, துலார குணதிலக்க, சுதீபா லியனகே மற்றும் சுகத் பிரசன்ன ஆகியோர் வழக்கில் ஏனைய சந்தேகநபர்களாவர்.
சந்தேகநபர்கள் கடந்த திங்கட்கிழமை திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான அரச தரப்பு சட்டத்தரணி பிணை வழங்குவதற்கு எதிராக ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்காக 02 நாட்கள் கால அவகாசம் கோரியிருந்தார்.
அரச தரப்பு சட்டத்தரணியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்றம் பிணை விண்ணப்பங்கள் தொடர்பில் ஆரம்பகட்ட ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை சமர்ப்பிக்குமாறு அறிவித்து பிணை விண்ணப்பங்கள் மீதான பரிசீலனையை இன்றைய தினம் வரை ஒத்திவைத்தது.
குறித்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது 10,000 ரூபா ரொக்கப் பிணை, தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளில் சந்தேகநபர்களை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதி மீண்டும் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
