சீமெந்து கலவை உடைந்து வீழ்ந்ததில் சிறுவன் காயம்

தொடர்மாடி குடியிருப்பில் சீமெந்து கலவை உடைந்து வீழ்ந்ததில் சிறுவன் காயம்

by Staff Writer 04-02-2026 | 7:31 PM

Colombo (News 1st) கொழும்பு - முகத்துவாரம் ஹெலமுத்து செவன அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியின் 07ஆவது மாடியிலிருந்து சீமெந்து கலவை வீழ்ந்ததில் சிறுவன் காயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

முகத்துவாரத்திலுள்ள ஹெலமுத்து செவன தொடர்மாடி குடியிருப்பின் 07ஆவது மாடியின் 02 வீடுகளுக்கு இடையில் காணப்பட்ட சீமெந்து கலவை இன்று(04) காலை 8.30 அளவில் வீழ்ந்துள்ளது.

தனது பாட்டியுடன் கடைக்கு சென்றிருந்த போது 07 வயதான சிறுவன் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக நியூஸ் ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

சீமெந்து கலவை சிறுவனின் தலையில் வீழ்ந்துள்ளது.

ஹெலமுத்து செவன தொடர்மாடி குடியிருப்பு 2019ஆம் ஆண்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

கடந்த காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட தொடர்மாடி குடியிருப்பு உட்பட 24 குடியிருப்பு தொகுதிகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

வீடுகளை மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி அதிகாரசபை  குறிப்பிட்டுள்ளது.