யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி

பொதுமக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை சீர்குலைவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை - ஜனாதிபதி

by Staff Writer 15-01-2026 | 8:33 PM

Colombo (News 1st)பொதுமக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை சீர்குலைவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் தேசிய ஒற்றுமை நிறைந்த நாட்டை உருவாக்குவதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவிக்கின்றார்.

வட மாகாண தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துக் கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

வட மாகாண தைப்பொங்கல் விழா யாழ்ப்பாணம் வேலணை ஐயனார் கோயில் விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று பகல் நடைபெற்றது.  

தமிழர்களின் கலைகலாசார நடனங்களுக்கு மத்தியில் பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்த ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

இதனையடுத்து பொங்கலுக்கான அரிசியை ஜனாதிபதி வழங்கினார்.

கலை நிகழ்வுகள் பொங்கல் விழா மேடையை அலங்கரித்தன.

இதனையடுத்து பொங்கல் விழாவுக்கு வருகை தந்திருந்த பொதுமக்களுடன் நிழற்படம் எடுத்துக்கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அங்கிருந்த மக்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இதன்போது உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதேவேளை, தேசிய தைப்பொங்கல் விழா அலரிமாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று நடைபெற்றது.

பல்வேறு கலாசார அம்சங்கள் பொங்கல் விழாவை அலங்கரித்தன.