.webp)
-607552-552602.jpg)
Colombo (News 1st) தேங்காய் மற்றும் தெங்கு சார்ந்த உற்பத்திகளின் ஏற்றுமதிகளினால் ஈட்டப்பட்ட அந்நிய செலாவணி வருமானம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளது.
ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தரவுகளுக்கமைய 2025 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் இதனூடாக ஈட்டப்பட்ட வருமானம் ஆயிரத்து 33 தசம் 9 மில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது இது 43 தசம் 83 வீத அதிகரிப்பு எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முழுத் தேங்காய் ஏற்றுமதியை விட பெறுமதி சேர் தெங்கு உற்பத்திகளின் ஏற்றுமதி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதன்படி தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய், தேங்காய் க்ரீம், நீரற்ற தேங்காய், எக்டிவேடட் கார்பன் மற்றும் கொகொ பீட் உள்ளிட்ட உற்பத்திகளுக்கான கேள்வி சர்வதேச அளவில் உருவாகியுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 7 தசம் 2 வீதத்தை தெங்கு சார்ந்த உற்பத்திகளே கொண்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டாகும் போது தெங்கு ஏற்றுமதி துறையில் அந்நிய செலாவணி வருமானத்தை 2 தசம் 5 பில்லியன் டொலர்கள் வரை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதுடன் அதற்கு நீண்டகால திட்டமாக வடக்கு, தெங்கு முக்கோண வலயம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.
இதில் 16,000 ஏக்கர் உட்பட மொத்தமாக 36,000 ஏக்கரில் புதிதாக தென்னங் கன்றுகளை நடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
