இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் - பிரதமர் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் - பிரதமர் இடையே சந்திப்பு

by Staff Writer 24-11-2025 | 4:02 PM

Colombo (News 1st) இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் அமைதிப்படையின் கல்வி மற்றும் கலாசாரப் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டம் குறித்தும் ஏனைய ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இந்த சந்திப்பின் போது தௌிவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்கா தலைமையிலான Fulbright சர்வதேச புலமைப்பரிசில் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான கல்வி உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் அவர் விடயங்களை முன்வைத்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களுக்காக கல்வி அமைச்சு, பரீட்சை திணைக்களம் , தேசிய கல்வி நிறுவகம் ஆகிய துறைகளில் தொழில்நுட்ப நிபுணத்துவ உதவியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் Matthew John Duckworth மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலும் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பிலும் இரு நாடுகளின் மக்களுக்கு இடையிலான உறவுகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் பிராந்திய உரையாடலை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில் இலங்கையின் ஆர்வம் குறித்தும் நினைவூட்டிய பிரதமர், பிராந்திய, பலதரப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தொழில்சார் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒழுங்குவிதிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியமென பிரதமர் ஹரிணி அமரசூரிய இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தொழிற்கல்வி பிரிவை வலுப்படுத்துவதற்கான அறிவு, தொழில்நுட்ப நிபுணத்துவம், அனுபவப் பகிர்வு என்பவற்றின் அவசியம் தொடர்பிலும் பிரதமரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.