.webp)
Colombo (News 1st) தீபாவளி திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்தமையை நினைவு கூர்ந்து, அதர்மத்தை தோற்கடித்து அநீதியை வென்றமையை போன்று, அனைவரின் இதயங்களிலும் இருள் நீங்கி ஒளி பரவட்டும் என்ற பிரார்த்தனையை தாங்கி இந்துக்கள் மத அனுஷ்டானங்களில் ஈடுபடுவதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள பாரிய சவாலைப் போன்றே நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் போதைப்பொருள் மற்றும் மறைந்துள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, அனைவரது வாழும் உரிமையை உறுதி செய்தல், அதனை ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமையாக மேம்படுத்துதல் என்பன புதிய அரசாங்கத்தின் முயற்சிகளின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து மதவாத மற்றும் இனவாத சக்திகளையும் தோற்கடித்து சமூக நீதியை நிலைநாட்டவும், அனைவரும் தமது அனைத்து சிவில், அரசியல் மற்றும் கலாசார உரிமைகளையும் தடையின்றி அனுபவிக்கக்கூடிய, அனைவரின் சுதந்திரமும் கண்ணியமும் பாதுகாக்கப்படும் ஒரு பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்பவும் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, தீபாவளிப் பண்டிகை இருள் நீங்கி, ஒளி பிறப்பதை அடையாளப்படுத்துவதுடன், இந்தத் தீபாவளியின் ஒளி, பொருளாதார மீட்சிக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் வித்திடும் மெய்ஞ்ஞான ஒளியாக அமையட்டுமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அனைவரும் கலாசாரப் பல்வகைமையின் மதிப்பை உணர்ந்து, கௌரவம், ஏற்றுக்கொள்தல், சகோதரத்துவம் ஆகிய பண்புகளுடன் கைகோர்க்க வேண்டுமென பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
வீடுகளிலும், நகரங்களிலும் ஏற்றப்படும் ஆயிரக்கணக்கான தீபங்களின் ஒளி, அனைத்து இலங்கையர்களினதும் மனங்களில் நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் ஞானத்தின் ஒளியைப் பரவச் செய்வதாக அமையப் பிரார்த்திப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெற்றியடைந்த சிறந்த சமூகத்தை நோக்கி பயணிக்க வேண்டுமென்பதே தீபாவளித் திருநாள் உணர்த்தும் விடயமென எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையானது, அனைவரது மனதிலும் நல்லெண்ணங்களை உருவாக்கும் ஔியை பரவச் செய்யும் நாளாக அமைய வேண்டுமென பிரார்த்திப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.