.webp)
Colombo (News 1st) இந்த வருடத்தில் புதிதாக 07 முதலீட்டு வலயங்கள் நிறுவப்படுமென இலங்கை முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தில் 03 முதலீட்டு வலயங்களும் வடமேல், கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் தலா ஒரு முதலீட்டு வலயமும் நிறுவப்படவுள்ளதாக அதன் தலைவர் அர்ஜூன ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
300 ஏக்கர் பரப்பளவில் வட மாகாணத்தின் காங்கேசன்துறை முதலீட்டு வலயத்தில் ஆடை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் முதலீட்டு செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
200 ஏக்கர் பரப்பளவிலான பரந்தன் முதலீட்டு வலயத்தில் இரசாயன உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் தெரிவித்தார்.
மாங்குளத்தில் 200 ஏக்கர் பரப்பளவிலான முதலீட்டு வலயம் அமைக்கப்படவுள்ளது.
விவசாய மற்றும் மீன்பிடி உற்பத்திகளுக்கு பெறுமதி சேர்த்து ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள் இங்கு ஏற்படுத்தப்படவுள்ளன.
இரணவில முதலீட்டு வலயத்தில் சுற்றுலாத்துறை தொடர்பான செயற்றிட்டங்கள் நிறுவப்படவுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஏறாவூரில் நிறுவப்படவுள்ள முதலீட்டு வலயத்தில் ஆடை உற்பத்திக்கு அவசியமான மூலப்பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.
ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் நிறுவப்படவுள்ளன.
இந்த புதிய முதலீட்டு வலயங்கள் நிறுவப்படுகின்றமையுடன் பிரதேச ரீதியாக முதலீட்டு வாய்ப்புகள் அதிகரித்து அதனுடன் இணைந்த பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுமென இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் தெரிவித்தார்.