49 ஆவது பிரதம நீதியரசராக ப்ரீத்தி பத்மன் சூரசேன..

49 ஆவது பிரதம நீதியரசராக ப்ரீத்தி பத்மன் சூரசேன நியமனம்

by Staff Writer 27-07-2025 | 5:36 PM

Colombo (News1st) இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசரான ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றார்.

இன்று(27) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.  

பிரதம நீதியரசர் முர்து நிருபா பிந்துஷினி பெர்னாண்டோ ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வெற்றிடமாகிய பதவிக்கு ப்ரீத்தி பத்மன் சூரசேனவின் பெயரை அரசியலமைப்பு சபை அண்மையில் அங்கீகரித்தது.

இதற்கமைய ப்ரீத்தி பத்மன் சூரசேன நாட்டின் 49ஆவது பிரதம நீதியரசராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.

1989ஆம் ஆண்டு சட்டத்தரணியாக பதவியேற்ற ப்ரீத்தி பத்மன் சூரசேன, பின்னர் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் இணைந்து அரச தரப்பு  சட்டத்தரணியாக பணியாற்றியதுடன், 2007ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

2016ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் 2018 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவராகவும் 2019 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதியரசராகவும் நியமிக்கப்பட்டார்.

அப்போதிலிருந்து உயர் நீதிமன்ற நீதியரசராக செயற்பட்டுவரும் ப்ரீத்தி பத்மன் சூரசேன, முன்னாள் பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோவிற்கு அடுத்த உயர் நீதிமன்ற நீதிபதிகளில் சிரேஷ்ட நீதியரசர் ஆவார்.