மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்

by Staff Writer 21-07-2025 | 4:02 PM

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சி ஆகிய மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று(21) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக குற்றஞ்சாட்டி இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2014 ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் சதொச நிறுவனத்தின் ஊடாக கேரம் போர்ட் மற்றும் தாம் போர்ட் ஆகியவற்றை இறக்குமதி செய்து அரசியல் இலாபம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் விளையாட்டு சங்கங்களுக்கு பகிர்ந்தளித்த சம்பவம் தொடர்பிலேயே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

2014 செப்டம்பர் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் விளையாட்டு கழகங்களுக்கு 14,000 கேரம் போர்ட் மற்றும் 14,000 தாம் போர்ட் ஆகியவற்றை கொள்வனவு செய்யும் போது 39 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டு பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குறிப்பிடக்கூடிய குற்றமிழைத்துள்ளதாக குற்றஞ்சாட்டி சட்ட மாஅதிபரால் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்காண்டோ ஆகிய இருவரையும் அடுத்த வழக்கு தினத்தில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.

குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்ட பின்னர் பிரதிவாதிகள் மூவரையும் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

தனித்தனியாக ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப்பிணை மற்றும் தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப்பிணைகளில் அவர்களை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

குற்றப்பத்திரிகைக்கு அமைய வழக்கு விசாரணைகளுக்காக 42 பேர் மற்றும் 11 வழக்கு பொருட்கள் முன்வைக்கப்படவுள்ளன.

சட்ட மாஅதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் முன்னிலையானதுடன், பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சஞ்சய் ராஜரத்னம், நளின் லத்துவஹெட்டி மற்றும் சாலிய பீரிஸ் ஆகியோர் முன்னிலையாகினர்.

வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 04ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.