.webp)
Colombo (News1st) இலங்கை விமானப்படையின் விமானிகளைப் பயிற்றுவிக்கும் கே 08 ரக விமானம் இன்று காலை வாரியபொல பகுதியில் விழுந்து நொறுங்கியது.
விமானத்தின் 2 விமானிகளும் பரசூட் மூலம் வாரியபொல பாதெனிய பகுதியிலுள்ள மினுவங்கெட்ட வித்தியாலயத்தின் மைதானத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் எரந்த கீகனகே தெரிவித்தார்.
விமானத்திலிருந்த பிரதான பயிற்சி ஆலோசகராக செயற்பட்ட விங் கமாண்டர் மற்றும் விமான அதிகாரி ஆகியோர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விமானம் வாரியபொல பகுதியிலுள்ள தென்னந்தோப்பில் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என விமானப்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.
கட்டுநாயக்க விமானப்படை முகாமிலிருந்து பயிற்சி நடவடிக்கைகளுக்காக இன்று(21) காலை 7.27 அளவில் இந்த விமானம் பயனத்தை ஆரம்பித்துள்ளது.
சிறிது நேரத்தில் அதாவது 7.57 அளவில் குறித்த விமானம் நொறுங்கி விழுந்ததாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.
விமானம் நொறுங்கி விழுந்த பகுதிக்கு கட்டுநாயக்கவில் இருந்து 2 விமானப்படை ஹெலிகொப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்த விமான விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவினால் 07 உறுப்பினர்கள் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.