வரவு செலவுத்திட்டத்தின் இறுதி வரைபு ஜனாதிபதியிடம்

2025 வரவு செலவுத்திட்டத்தின் இறுதி வரைபை ஜனாதிபதி பார்வையிட்டார்

by Staff Writer 16-02-2025 | 6:12 PM

Colombo (News 1st) 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இறுதி வரைபை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று(16) ஜனாதிபதி அலுவலகத்தில் பார்வையிட்டார்.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன இதன்போது இணைந்திருந்தார்.

2025ஆம் ஆண்டுக்காக புதிய அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் நாளை(17) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சுதந்திர இலங்கையின் 79ஆவது வரவு செலவுத்திட்டம் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்படவுள்ளது.

அரசாங்கத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 4,218 பில்லியன் ரூபாவாகும்.

கடந்த வருடத்தை விட அரசாங்கத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 2760 பில்லியன் ரூபாவால் குறைவடைந்துள்ளமை விசேட அம்சமாகும்.

2024ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் செலவு 6,978 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர் வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 18 முதல் 25ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இதனையடுத்து பெப்ரவரி 25ஆம் திகதி மாலை 6 மணிக்கு இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பான குழுநிலை விவாதம் பெப்ரவரி 27 முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 4 சனிக்கிழமைகளுடன் 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

அதன் பின்னர் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 21ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.