எரிசக்தி அமைச்சர் - இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

எரிசக்தி அமைச்சர் - இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இடையே கலந்துரையாடல்

by Staff Writer 16-02-2025 | 7:53 PM

Colombo (News 1st) எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இருநாடுகளுக்கும் இடையிலான எரிசக்தி கூட்டிணைவு தொடர்பில் பல்வேறு விடயங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருக்கிடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இருநாடுகளுக்குமிடையில் தற்போதுள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்களில் இருந்து விலகுவதாக அதானி நிறுவனம் அறிவித்துள்ள பின்னணியில் இந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

இதனிடையே, அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நிலக்கரியின் தரத்தை சோதிக்கும் ஆய்வுகூடமொன்று நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தால் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன, எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதனிடையே நுரைச்சோலை லக் விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் 3 மின்பிறப்பாக்கிகளும் திருத்தப்பட்டுள்ளன.

இவற்றில் 2 மின்பிறப்பாக்கிகள் தேசிய கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்மூலம் இணைக்கப்படும் மின்சாரத்தின் கொள்ளளவு 600 மெகாவாட் ஆகும்

எஞ்சியுள்ள மின்பிறப்பாக்கி தேவைக்கேற்ப தேசிய கட்டமைப்பில் இணைக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.