2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம்

2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

by Staff Writer 09-01-2025 | 2:45 PM

Colombo (News 1st) 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் எனப்படும் வரவு செலவுத் திட்டம் இன்று(09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பிரதமர் ஹரினி அமரசூரிய இதனை முன்வைத்தார்.

நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு தொடர்பான உரை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதன்பின்னர் நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் எனப்படும் வரவு செலவுத்திட்ட இரண்டாம் மதிப்பீடு தொடர்பான உரை மீதான விவாதம் அடுத்த மாதம் 18 முதல் 25ஆம் திகதி வரை தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது.

இதனையடுத்து அன்றைய தினம் அதாவது பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு சபையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 27 முதல் மார்ச் 21ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எனப்படும் குழுநிலை விவாதம் நடத்தப்படவுள்ளது.

வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21ஆம் திகதி பிற்பகல் சபையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்காக புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்காக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலமும் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்