இஸ்ரேல் இராணுவம் துப்பாக்கிச்சூடு; 104 பேர் பலி

காஸாவில் நிவாரணப் பொருட்களுக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் துப்பாக்கிச்சூடு; 104 பேர் பலி

by Bella Dalima 01-03-2024 | 5:35 PM

Colombo (News 1st) காஸாவில் நிவாரணப் பொருட்களுக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 104 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

காஸாவின் மேற்கு பகுதியில் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வருவதாக தகவலறிந்து ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். 

நிவாரணப்பொருட்களை கொண்டு வரும் லொறிகளுடன் இஸ்ரேல் இராணுவ வாகனங்களும் வந்தன. 

லொறி குறித்த பகுதிக்கு வந்ததும், மக்கள் லொறியை முற்றுகையிட்டு பொருட்களை வாங்க முண்டியடித்தனர். அப்போது கூட்ட நெரிசலில் சிலர் சிக்கி காயம் அடைந்ததாக தெரிகிறது.

இதனால் இஸ்ரேல் இராணுவம் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றுள்ளது. அத்துடன், திடீரென மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதில் 104 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுள்ளனர். 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை உறுதி செய்த இஸ்ரேல் இராணுவம், "நிவாரணப் பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் முண்டியடித்தனர். அப்போது அருகில் இருந்த இஸ்ரேல் இராணுவ வாகனத்தை நோக்கி வந்தனர். அவர்கள் இராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக நம்பப்பட்டது. இதனால் தங்களை காப்பாற்ற துப்பாக்கிச்சூடு நடத்தினர்," என தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் இது ஒரு படுகொலை என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

நேற்றைய தினம் (29) இடம்பெற்ற இந்த சம்பவத்தையடுத்து, இஸ்ரேல் மீதான சர்வதேசத்தின் கண்டனம் தீவிரமடைந்துள்ளது.​

இந்த சம்பவத்தை ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ் வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், பொதுமக்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் வௌிவிவகார கொள்கைகளுக்கான தலைவர் உள்ளிட்டவர்கள் இந்த சம்பவத்தைக் கண்டித்துள்ளதுடன், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 4 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. 

இந்த போரில் காஸாவில் மட்டும் இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதுடன், இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.