சீதாஎலிய சீதையம்மன் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேகம்

நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேகம்

by Staff Writer 11-02-2024 | 6:34 PM

Colombo (News 1st) இராமாயணத்துடன் தொடர்புடைய ஆலயமாக போற்றப்படுகின்ற நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேகம் இன்று(11) இடம்பெற்றது.

அயோத்தி இராமர் ஆலய கும்பாபிஷேகம் அண்மையில் இடம்பெற்ற நிலையில் இந்த ஆலயத்தில் கும்பாபிஷேக திருப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.

 சீதாஎலியா சீதையம்மன் ஆலயம், இராவணனால் சீதை சிறைவைக்கப்பட்ட அசோக வனத்தில் அமைந்துள்ளதாக நம்பப்படுகின்றது.

இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் இன்று பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காலை முதல் நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளை அடுத்து பாலாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மூலமூர்த்திகளான இராமர், சீதை, இலட்சுமனன், ஆஞ்சநேயர் மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த பூஜை வழிபாடுகளில் இந்தியா உள்ளிட்ட வௌிநாடுகளில் இருந்தும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இராம ஜென்ம பூமியான அயோத்தியில் பிராண பிரதிஷ்டை நடைபெற்று இராமல் ஆலயம் திறக்கப்பட்டுள்ள நிலையில் சீதாஎலியா சீதையம்மனுக்கு மகா கும்பாபி​ஷேகம் விரைவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.