தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான தீர்மானம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான உயர் நீதிமன்றின் தீர்மானம்

by Staff Writer 31-12-2024 | 2:28 PM

Colombo (News 1st) கடந்த செப்டம்பர் 15ஆம் திகதி இடம்பெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளின் பரீட்சைக்கு முன்னதாகக் கசிந்த 3 வினாக்களுக்காக இலவச புள்ளிகளை வழங்க மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று(31) தீர்மானித்துள்ளது.

இந்த பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில் விசேட நிபுணர் குழுவால் வழங்கப்பட்டுள்ள 3 பரிந்துரைகளில் பொருத்தமான பரிந்துரையை தெரிவு செய்து அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நீதியரசர்கள் குழாம் தமது உத்தரவை பிறப்பித்து பரீட்சை ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் வினாத்தாள் கசிந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களான I.G.S.பிரேமதிலக 3 மில்லியன் ரூபாவும் சமிந்த குமார இலங்கசிங்க 2 மில்லியன் ரூபாவும் இழப்பீடாக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் எனவும் நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க, அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று(31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளை இரத்து செய்து, அதற்காக மீண்டும் பரீட்சையை நடத்துமாறு பரீட்சை ஆணையாளருக்கு உத்தரவிடும் இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

கடந்த டிசம்பர் 18ஆம் திகதி மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பின் சட்டத்தரணிகளால் வாய்மொழி மூல சமர்ப்பணங்களை முன்வைக்கும் நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் நீதியரசர்கள் குழாம் மனு தொடர்பான தீர்ப்பை இன்று வழங்குவதாக அறிவித்திருந்தது.