Colombo (News 1st) மின்கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் 17ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கான பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுவதாக ஆணைக்குழு கூறியுள்ளது.
இன்று ஊவா மாகாணத்திலும் எதிர்வரும் 3ஆம் திகதி முதல் ஏனைய மாகாணங்களிலும் பொதுமக்கள் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த நடவடிக்கையின் பின்னர் எடுக்கப்படும் இறுதி தீர்மானம் எதிர்வரும் 17ஆம் திகதி அறிவிக்கப்படுமென ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
இதனிடையே, மின்சார சபை ஊழியர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவையும் வழங்கி மின்சாரக் கட்டணத்தையும் 6 வீதத்தால் குறைக்க முடியும் என இலங்கை மின்சார சபையின் பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கான பரிந்துரைகள் கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியிலேயே முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.