டலஸ் அலகப்பெரும ஜனாதிபதிக்கு கடிதம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை இரத்து செய்ததால் 72 கோடி ரூபா வீண்விரயம் - டலஸ் அலகப்பெரும ஜனாதிபதிக்கு கடிதம்

by Staff Writer 09-12-2024 | 6:41 PM

Colombo (News 1st) உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இரத்து செய்ததால் 72 கோடி ரூபாவிற்கும் அதிக அரச பணம் வீண் விரயமாகியுள்ளதாக சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

22 மாதங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்து புதிய வேட்புமனுக்களை முன்வைத்து விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தற்போதைய அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளினதும் மக்களினதும் ஆசிர்வாதம் கிடைக்கும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் வங்குரோத்து நிலைமையை மூடி மறைக்கும் நோக்கில் 2023 ஜனவரி மாத இறுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இரத்து செய்யும் வகையில் தான்தோன்றித்தனமாக எடுத்த தீர்மானத்தால் 72 கோடி ரூபாவிற்கும் அதிக அரச பணம் வீண்விரயமாகியதாக குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த பணம் ஆட்சியாளர்களின் தனிப்பட்ட பணம் இல்லை எனவும் மாறாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணம் எனவும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் எதிர்க்கட்சித் தலைவர், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்த தேர்தல் ஆணைக்குழுவையும் ஆணையாளர்களையும் தூற்றி தேர்தலை நடத்துமாறு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் மற்றும் நீதியரசர்களை அவமானத்திற்குட்படுத்தி செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தாம் அரசியல் முதிர்ச்சியற்றவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி கொள்ளை, சீனி வரி மோசடி, விசா மோசடி போன்ற அரசியல் குற்றங்களின் பட்டியலில் குறித்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கொள்ளையும் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் அரசியலமைப்பின் மூலம் பெறப்பட்ட அரசியல் சலுகைகளை ஆராயாது உரிய பிரதிவாதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் டலஸ் அழகப்பெரும தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.