12 வருட வரலாற்றை மாற்றிய இலங்கை

12 வருடங்களின் பின்னர் நியூஸிலாந்தை வெற்றிகொண்ட இலங்கை

by Rajalingam Thrisanno 18-11-2024 | 2:57 PM

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணி 12 வருடங்களின் பின்னர் நியூஸிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரொன்றை வெற்றிகொண்டுள்ளது.

இலங்கையில் இந்நாட்களில் நடைபெற்றுவரும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரின் 2ஆவது போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இலங்கை அணி இந்த சிறப்பை பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாறு 45 வருடங்களைக் கொண்டதாகும்.

இந்த வரலாறு 1979 ஆம் ஆண்டு இரண்டாவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருடன் ஆரம்பமாகியுள்ளதுடன் இதுவரை இவ்விரண்டு அணிகளும்  104 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

அவற்றில் நியூஸிலாந்து  ​52 வெற்றிகளையும் இலங்கை​ 43 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

ஒரு போட்டி சமநிலையில் முடிந்துள்ளதுடன் 8 போட்டிகள் முடிவின்றி கைவிடப்பட்டுள்ளன.

இலங்கை அணி இறுதியாக நியூஸிலாந்துக்கு எதிராக மஹெல ஜயவர்தன தலைமையில் 2013 ஆம் ஆண்டில் சர்வதேச ஒருநாள் தொடரில் வெற்றிபெற்றுள்ளது.  

5 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரில்  3-0 எனும் ஆட்டக்கணக்கில் இலங்கை அணி வெற்றிபெற்றது.

அப்போது நியூஸலாந்து அணியின் தலைவராக ரொஸ் டெய்லர் செயற்பட்டிருந்தார்.

அதன் பின்பு இலங்கை அணி கடந்த  12 ஆண்டுகளில் நியூஸிலாந்தை 5 சர்வதேச ஒருநாள் தொடர்களில் எதிர்கொண்டுள்ளதுடன் அவற்றில்  ​தொடர்களை நியூஸிலாந்தே கைப்பற்றியுள்ளது.

ஒரு தொடர் மாத்திரம் 1 -1 எனும் கணக்கில் சமநிலையில் முடிந்துள்ளன.

அந்த  ​தொடர்களில்  21 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதுடன் அதில் நியூஸிலாந்து 13 வெற்றிகளைப் பெற்றுள்ளதுடன் இலங்கையால் 4 போட்டிகளை மாத்திரமே வெல்ல முடிந்துள்ளது.

எஞ்சிய 4 போட்டிகள் முடிவின்றி கைவிடப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழலில் பல்லேகெலேவில் கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இந்நிலையில் நேற்று(17) நடைபெற்ற 2 ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி டக்வேர்த் லூவிஸ் விதிமுறையில் 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று ஒரு போட்டி எஞ்சிய நிலையில் சர்வதேச ஒருநாள் தொடரை தன்வசப்படுத்தியது.

மழை காரணமாக தடைப்பட்ட இந்தப் போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 45.1 ஓவர்களில் 209 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பதிலளித்தாடிய இலங்கை அணி 46 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது.

குசல் மென்டிஸ் 74 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.

இரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் போட்டி கண்டி பல்லேகெலே மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.