காலிமுகத்திடலில் நிறுத்தியுள்ள வாகனங்கள்

காலிமுகத்திடலில் நிறுத்தியுள்ள வாகனங்களை அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்தவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது

by Staff Writer 26-09-2024 | 7:42 PM

Colombo (News 1st) காலிமுகத்திடல் உள்ளிட்ட ​கொழும்பின் சில பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான வாகனங்களை அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்தவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

காலிமுகத்திடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான வாகனங்களை பார்வையிடுவதற்காக ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் ஆனந்த விஜேபால இன்று பிற்பகல் அங்கு சென்றிருந்தார்.

இதன்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கடந்த அரசாங்கத்தினால் தமக்கு நெருக்கமானவர்களை பல்வேறு ஆலோசகர் பதவிகளுக்கு நியமித்து சொகுசு வாகனங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வாகனங்களே இவ்வாறு ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனவே இந்த வாகனங்களை பாதுகாக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக, பொலிஸாரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாக ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் வரிப்பணத்தின் மூலம் பெறப்பட்ட வாகனங்கள் என தெரிவித்த அவர், பொதுமக்களின் சொத்துக்களை பாதுகாப்பது தமது பொறுப்பெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்த வாகனங்கள் தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

குறித்த வாகனங்களை மிகவும் பயனுள்ள வகையில் அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய அம்பியூலன்ஸ் வாகனங்கள் இன்மை, கல்வித்துறை மேம்பாட்டுக்கான வாகனங்கள் இன்மை, பொலிஸாருக்கான வாகனங்கள் இன்மை உள்ளிட்ட விடயங்களை கவனத்திற்கொண்டு அடுத்தகட்ட  நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.